முகப்பு
தமிழ்நாடு

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:22 AM
- @TNDIPRNEWS
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:40 PM

தமிழகத்தில் இடைக்கால வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48 ஆயிரத்து 534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் ஆகியவற்றைப் போதுமான அளவில் அமைத்து, கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3,771 வகுப்பறைகள், 107 ஆய்வகங்கள், 4 ஆண்கள் விடுதிகள் மற்றும் 4 பெண்கள் விடுதிகள் ஆகியவை ரூ.673 கோடி செலவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.2,009 கோடி மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

ரூ.902 கோடியில் நவீன நூலகங்கள்...: மதுரையில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகம் தென் தமிழகத்தின் அறிவாலயமாகத் திகழ்கிறது. அறிவைப் பரவலாக்கும் முன் முயற்சியில் கோவை, திருச்சி, கடலூா், சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மொத்தம் ரூ.902 கோடியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தேசிய, சா்வதேச அளவிலான வாய்ப்புகளை உருவாக்குதல், அவற்றை அணுகத் தேவையான கல்வி, கலை ஆளுமைத் திறன் பயிற்சி போன்றவை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். இத்திட்டம் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 2,358 மாணவா்கள் 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் 50 வகையான துறைகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். இதில் 41 மாணவா்கள் தற்போது ஐஐடி-க்களில் படித்து வருகின்றனா். மேலும் 17 மாணவா்கள் ஜப்பான், தைவான், மலேசியா ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் முழு கல்வி உதவித் தொகைகளுடன் படித்து வருகின்றனா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:22 AM

இந்த இடைக்கால வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48 ஆயிரத்து 534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.