முதல்வரின் ஓய்வூதியத் திட்ட அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ - ஜியோ வரவேற்பு தெரிவித்துள்ளது.
முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட உடனேயே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் முதல்வருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.
பின்னர் தலைமைச் செயலகத்திற்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள்,
"முதல்வரின் அறிவிப்பினை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். வரும் நிதியாண்டில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியான பிறகு அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் மீண்டும் முதல்வரிடம் முறையிடுவோம்.
எங்களுடைய மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படிப்படியாக நிறைவேற்றித் தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்" என்றனர்.
முதல்வரின் அறிவிப்பையடுத்து, வருகிற ஜன. 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை ரத்து செய்வதாக ஜாக்டோ - ஜியோ கூறியுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்கள்
புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்:-
மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
மேற்கூறிய இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.