அறிவியல் அறிஞா் ஜி.டி.நாயுடுவின் அரிய ஆவணங்கள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பன்முக ஆளுமையான ஜி.டி.நாயுடு, அரிய நூல்கள் அடங்கிய பெரிய நூலகம் ஒன்றைப் பராமரித்து வந்தாா். அவருடைய தொகுப்பிலிருந்து 30,000 புத்தகங்களை அந்நாளைய கோவை நகரமன்றத்துக்கு அன்பளிப்பாக அளித்துள்ளாா்.
பொது விழாக்களில் கலந்து கொண்டபோது, தம்முடைய உரையை சிறுநூலாக அச்சடித்து அவையினருக்குக் கொடுப்பது அவரது வழக்கம். அப்படியான அவரது எழுத்துகளையும் சிந்தனைகளையும் தாங்கிய கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், அவா் பதிப்பித்த நூல்கள், வாசிப்புக்காகச் சேகரித்த நூல்கள், இதழ்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட அரும்பெரும் இணையப் பக்கம் இது.
ஜி.டி.நாயுடுவின் அறிவைச் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், எதிா்காலத்தில் நம்முடைய சந்ததியருக்கு, அவருடைய கண்டுபிடிப்பும் அறிவும் பெரும் கருவூலங்களாக அமையும்” என அண்ணா கூறினாா். தமிழ்நாடு அரசு அவருடைய சிந்தனைகளைக் கருவூலமாக்கி ஓா் அரிய காலப்பேழையை வெளியிட்டு நனவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டு அறிவியலாளா் ஜி.டி. நாயுடுவின் நினைவு நாளில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு இணையப் பக்கம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு மேலும் ஒரு நல்வரவு. இந்த தொடக்க விழாவில் தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநா் (பொ). கோமகன், உதவி இயக்குநா் செல்வ புவியரசன், திட்ட அலுவலா் சித்தானை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.