கோப்புப் படம் 
தமிழ்நாடு

அரசின் ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு வரவேற்பு!

அரசின் ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

அரசின் ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அ. அமலராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

''தமிழ்நாடு அரசு, தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டநாள் வேதனையை உணர்ந்து “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ” அறிவித்திருப்பது, சமூக நீதி, மனிதநேயம், பொறுப்புணர்வு ஆகியவற்றின் அழகிய சங்கமமாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாநில அமைப்பு தனது உளமார்ந்த நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறது.

இருபது ஆண்டுகளின் போராட்டத்திற்கு கிடைத்த கண்ணியமான முடிவு. 2003 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை பறித்த ஒரு காலகட்டத்தை உருவாக்கியது.

ஆனால், அந்த உரிமையை மீட்டெடுக்கும் போராட்டம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாது தொடர்ந்தது.

அந்தப் போராட்டப் பாதையில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், பதவிகளையும், வசதிகளையும் பின்புறம் தள்ளி, வெயிலையும், மழையையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, ஆசிரியர்–ஊழியர் நலனுக்காக குரல் கொடுத்த ஜாக்டோ–ஜியோ, தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு, எஸ்.டி.எஃப்.ஐ., உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்–ஊழியர் கூட்டமைப்புகளின் முன்னணி தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகள், களப்போராளிகள், மேலும் பெயர் சொல்லப்படாத ஆயிரக்கணக்கான சாதாரண ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரின் தியாகங்களையும் இந்தத் தருணத்தில் பணிவுடன் நினைவுகூருகிறோம்.

இந்த நீண்ட போராட்டங்களின் விளைவாக, ஜன. 3 ஆம் தேதி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது ஒரு நிர்வாக அறிவிப்பு அல்ல; 6.75 லட்சம் குடும்பங்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட அரசின் உத்தரவாதம்.

• 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு 50% ஓய்வூதியம்

• அகவிலைப்படி உயர்வு – ஆறு மாதங்களுக்கு ஒருமுறை

• 60% குடும்ப ஓய்வூதியம்

• அதிகபட்சம் ரூ.25 லட்சம் பணிக்கொடை

• குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதம்

• சிபிஎஸ்-ல் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்புக் கருணை ஓய்வூதியம்

பழைய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும், சமூகப் பாதுகாப்பு நோக்கம், மரியாதை உணர்வு ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட திட்டமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) திகழ்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில், மனிதநேயமும், அரசின் பொறுப்புணர்வும் வெளிப்படும் ஒரு முன்னேற்றமான திட்டமாக இது அமைந்துள்ளது.

10% ஊழியர் பங்களிப்பு தொடர்வது ஒரு குறையாக இருந்தாலும், எதிர்காலத்தில் பங்களிப்பு இல்லாத முழுமையான ஓய்வூதியத் திட்டமாக இதை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்த அரசின் அணுகுமுறை உருவாக்கியுள்ளது.

போராட்டத்தின் குரலைக் கேட்டு, அதை தீர்மானமாக மாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமைத்துவம், ஆசிரியர்–ஊழியர் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படும்.

கடந்த 20 ஆண்டுகால போராட்டங்களில் பங்கெடுத்த அனைத்து இயக்கத் தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும், களப்போராளிகளுக்கும், மேலும் இன்று இந்த வெற்றியின் பயனை அடைய உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும், இந்த தருணம் ஒரு நினைவுச் சின்னமாக அமையட்டும்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது, போராட்டம் ஒருபோதும் வீணாகாது என்பதற்கான ஒரு வரலாற்றுச் சான்றாக நிலைத்திருக்கட்டும்'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNASTF has welcomed the government's pension scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 20 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி

முதல்வா் குறித்து அவதூறு கருத்து: சைபா் குற்றப் பிரிவு வழக்கு

சித்த மருத்துவ தினம்: இலவச மருத்துவ முகாம்

இந்தோனேசியா: திடீா் வெள்ளத்தில் 16 போ் உயிரிழப்பு

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

SCROLL FOR NEXT