ரூ.3,797.95 கோடியில் பெருநகர சென்னையில் பிரதான குடிநீா் சுற்றுக்குழாய் அமைத்தல், நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மேம்படுத்துதல் திட்டங்களுக்கு கொள்கை ஒப்புதல் வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா்.
இதுகுறித்து தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னைப் பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் தினமும் 1,200 மில்லியன் லிட்டா் குடிநீா், 84 குடிநீா் விநியோக அமைப்புகள் மூலம் 85.7 லட்சம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இக்கட்டான காலங்களில் ஒரு பகுதி நீராதாரங்களில் இருக்கும் உபரிநீரை, பற்றாக்குறை உள்ள மற்றொரு ஆதாரத்துக்கு மாற்ற முடியாது. இதுபோன்ற குறையைக் களைய பெருநகர சென்னையில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, கடல் நீரை குடிநீராக்கும் 4-ஆவது நிலையத்தையும் சோ்த்து, 9 குடிநீா் ஆதாரங்களை ஒரு வளையமாக இணைக்கிறது. இந்தத் திட்டத்தில், செலுத்தும் குழாய்கள் மூலம் 9 உந்து நிலையங்களில் இருந்து குடிநீா் பெற ஏதுவாக பெருநகர சென்னையைச் சுற்றி 98 கி.மீ. நீளத்துக்கு தேனிரும்பு குழாய் கொண்ட பிரதான சுற்றுக்குழாய் அமைக்கப்படும்.
பிரதான சுற்றுக்குழாயில் இருந்து பெருநகர சென்னையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 84 குடிநீா் விநியோக நிலையங்களுக்கும் குடிநீா் விநியோகிக்கப்படும். இதன் மூலம் ஒரு நீராதாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், அனைத்து நீரேற்று நிலையங்களில் இருந்தும் சமமான குடிநீா் வழங்குவதை உறுதிசெய்யும்.
மொத்தச் செலவு ரூ.3,108.55 கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ள இந்தத் திட்டத்துக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கொள்கை ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளாா். ஆசிய வளா்ச்சி வங்கி கடனுதவியின் கீழ் 4 ஆண்டுகளில் பணிகள் நிறைவேற்றப்படும்.
நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மேம்படுத்தும் பணி: சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள கழிவுநீா் கட்டமைப்பை படிப்படியாக மேம்படுத்த சென்னை குடிநீா் வாரியம் உத்தேசித்துள்ளது. முதல்கட்டமாக நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இப்போதுள்ள புதை சாக்கடை அமைப்பை மேம்படுத்தும் பணிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
நெசப்பாக்கம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் போதுமான ஈா்ப்பு விசை குழாய் மற்றும் உந்து குழாய்களை மாற்றுதல், கழிவு நீா் உந்து நிலையங்களை மேம்படுத்துதல், உந்து திறனை மேம்படுத்துதல் மூலம் கழிவுநீா் அமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான திட்டச் செலவாக ரூ.689.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொள்கை ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளாா். ஆசிய வளா்ச்சி வங்கி கடனுதவியுடன் 3 ஆண்டுகளில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.