செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
2026 பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் கூட்டணி பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி 6 மாதங்களுக்கு முன்பே அமைந்த நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக கடந்த வாரம் இணைந்தது. தமாகா ஏற்கெனவே கூட்டணியில் உள்ளது. மேலும், புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளதாக அறிவித்துள்ளன.
திமுக கூட்டணிக்கு வலுவான போட்டியை கொடுக்கும் வகையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகளைச் சோ்க்க பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, ஜன. 23 ஆம் தேதி தமிழகத்துக்கு பிரதமர் மோடி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். சென்னை புறநகர்ப் பகுதியில் கூட்டத்தை நடத்துவதற்கான ஆய்வுப் பணிகளை பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்தை நடத்த இடம் இறுதி செய்யப்பட்டு, இன்று காலை பூமிப் பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதில், பாஜக, அதிமுக கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக் கூட்டத்துக்கு முன்பே அதிமுக-பாஜக கூட்டணிக்கு இறுதிவடிவம் கொடுத்துவிட்டால், பிரதமா் மோடி முன்னிலையில் கூட்டணி கட்சித் தலைவா்களை மேடை ஏற்ற வேண்டும் என்ற முனைப்புடன், அதிமுக - பாஜக நிா்வாகிகள் கூட்டணி கட்சிகளுடன் தீவிரமாக பேச்சுவாா்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.