திருவள்ளுவர் நாளையொட்டி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று தைப்பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கலை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் தெய்வப் புலவராம் திருவள்ளுவரை நினைவுகூரும் வகையில் இன்று (ஜன.16) திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அந்த விடியோவில், “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்” என்ற குறள் வரியைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “நம்மால் இதைச் செய்ய முடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலே முயற்சி தரும்” என்று சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.