கரூர் மாவட்டம் ராச்சாண்டார் திருமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை அருகே ராச்சாண்டார் திருமலை எனப்படும் ஆர்டி. மலையில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நிகழாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவர்கள் ஆன்லைன் மூலமாக போட்டியில் பங்கேற்று காளைகளை அடக்க பதிவு செய்தனர். மேலும் போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதையடுத்து வழக்கம்போல இன்று (ஜன.17) காலை ராச்சாண்டார் திருமலையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின.
காலை 8:30 மணிக்கு தொடங்கிய போட்டியை கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போட்டியில் கரூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகள் போட்டியில் பங்கேற்றன.
போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு மது போதை பரிசோதனை செய்த பின்பே அவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் காளைகளை அடக்க வீரர்கள் 512 பேர் களமிறங்கினர்.
முதல்முதலாக போட்டியில் கோயில் மாடு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளை யாரிடமும் பிடிபடாமல் ஓடியது. தொடர்ந்து காளைகளை வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்குவோருக்கு பரிசாக சைக்கிள்கள், அண்டாக்கள், பீரோக்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. மேலும் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு பரிசாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கார் பரிசாக வழங்க உள்ளார்.
ஜல்லிக்கட்டின் போது மாடுகளுக்கோ அல்லது யாருக்காவது காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி செய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் மற்றும் முதலுதவி மருத்துவர்கள் என 33 பேர் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 441 காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.