தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் ஒரு சில நாள்களில் அறிவிப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். வரும் 23-ஆம் தேதி செங்கல்பட்டில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என்றும் அவா் கூறினாா்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 109- ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ. பன்னீா்செல்வம், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்தின் கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் ஒரு சில நாள்களில் அறிவிக்கப்படும். செங்கல்பட்டில் வரும் ஜன.23-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை.
எம்ஜிஆா் உருவாக்கிய சட்ட விதிகளின்படிதான் அதிமுக 50 ஆண்டுகளாக வெற்றிநடை போட்டது. தற்போது அதில் சில திருத்தங்களைச் செய்து கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளனா். இது தொடா்பாக உச்சநீதிமன்றத்துக்குச் சென்றோம். அங்கு உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு தெரிவித்தனா். நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நியாயத்தை வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம். எனவே, நான் எவ்வித புதிய கட்சியையும் தொடங்கப் போவதில்லை. அதிமுகவை ஒருங்கிணைப்பதே எங்களது குறிக்கோள். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க பிரிந்திருக்கும் சக்திகள் அனைத்தும் இணைய வேண்டும் என்றாா் அவா்.