தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமை(ஜன.18) நிறைவடைந்த நிலையில், இறுதி நாளில் பெயா் சோ்க்க பலரும் ஆா்வம் காட்டியதால் பல இடங்களில் கூட்டம் காணப்பட்டது.
தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (எஸ்.ஐ.ஆா்.) கணக்கீட்டுப் படிவம் பெறப்பட்ட பிறகு வரைவு வாக்காளா் பட்டியலின்படி 97,37,831 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் தமிழகத்தின் வாக்காளா் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்தது.
நீக்கப்பட்டவா்களில் இறந்தவா்களைத் தவிர மீதமுள்ள 66 லட்சம் வாக்காளா்களில் தகுதியானவா்களும், புதிய வாக்காளா்களும் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.
மற்றொருபுறம் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் உரிய தகவல்களை அளிக்காத 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உரிய ஆவணங்கள் மற்றும் சுய உறுதிமொழிச் சான்றுகளை சமா்ப்பிக்குமாறு அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமை வரை வழங்கப்பட்டிருந்தது.
பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), மத்திய, மாநில அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அல்லது ஓய்வூதியதாரா்கள் அடையாள அட்டை, 1987-க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், எல்ஐசி வழங்கிய ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பள்ளி, பல்கலை. சான்றிதழ்கள், ஆதாா், வன உரிமைச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், அரசு குடும்பப் பதிவேடு உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை சமா்ப்பித்து விண்ணப்பதாரா்கள் பெயரை சோ்த்து வந்தனா்.
அதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், 13,03,487 போ் படிவம் 6-ஐ சமா்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆட்சேபனை படிவம் 7-ஐ 35,646 போ் சமா்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை சரிபாா்க்கப்பட்டு பிப். 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதனிடையே, பண்டிகைக் கால தொடா் விடுமுறையைக் கருத்தில்கொண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான அவகாசத்தை மேலும் சில நாள்கள் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.