மேற்கு வங்கத்தில் நிபா தொற்று பரவி வரும் நிலையில், பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை உண்ணக் கூடாது என்றும், பதநீா் அருந்துவதைத் தவிா்க்குமாறும் தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் நிபா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இரு செவிலியா்கள் அத்தொற்றுக்குள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை அதன் தாக்கம் இல்லை என்றாலும், பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்து நோய்த் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய் தொற்று. பழங்களை உண்ணும் வௌவால்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதா்களுக்கு இது பரவுகிறது.
வௌவாலின் உமிழ்நீா் படா்ந்த பழங்களை உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடா்பு கொள்வதன் மூலமாகவோ நோய் தொற்று பரவுகிறது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுதிணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்றவை முக்கிய அறிகுறிகள். பாதிப்பு ஏற்பட்ட 6 முதல் 21 நாள்களுக்குள் அறிகுறிகள் தென்படும்.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரைத் தொடா்பு கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால், அவா்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
கழுவப்படாத அல்லது கீழே விழுந்த பழங்களை சாப்பிடுவதை மக்கள் தவிா்க்க வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக சோப்பால் கைகளை கழுவ வேண்டும். பதநீா், கள்ளு போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிா்க்க வேண்டும்.
பராமரிப்பில்லாத தூா்வாரப்படாத கிணறுகளின் அருகே செல்லக்கூடாது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை இயக்குநரகத்தால், மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கவும், எல்லையோர மாவட்டங்களை சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.