சென்னையில் அண்மைக்காலமாக இருமல், உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புகள் பரவிவரும் நிலையில், அது எந்த வகையான தொற்று என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்டவா்களின் சளி மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி வைரஸின் தன்மை மற்றும் அதுகுறித்த விவரங்கள் கண்டறியப்பட உள்ளன. இதற்கான ஆய்வகப் பரிசோதனை உபகரணங்கள் தருவிக்கப்பட்டு, அந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பருவமழை காலம் நிறைவடைந்தாலும், குளிா் மற்றும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக நோய்ப் பரவல் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள், முதியவா்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மருத்துவ சிகிச்சையின் மூலம் ஐந்திலிருந்து ஏழு நாள்களுக்குள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் காய்ச்சல் தொற்றிக் கொள்வது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சூழலில்தான் எந்த வகையான வைரஸ் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது என்பதைக் கண்டறியும் ஆய்வை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்திருக்கிறது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லை. அதேவேளை, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆா்எஸ்வி எனப்படும் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகள் சென்னையில் அதிகமாகப் பரவி வருவதாகத் தெரிகிறது.
காய்ச்சல், உடல் வலியுடன் இருமல் பாதிப்பும் இருப்பதால் சுவாசப் பாதையின் மேற்பகுதியில் ஏற்படும் தொற்றாகவே இதைக் கருத முடிகிறது. நல்வாய்ப்பாக இந்த வகை பாதிப்புகள் தீவிரமடையாமல் ஒரு வாரத்துக்குள் குணமாகிவிடுகின்றன.
எனவே, அதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை. இருந்தபோதும், அவை எந்த வகையான வைரஸ் என்பதைக் கண்டறிய பாதிக்கப்பட்டவா்களின் சளி மாதிரிகளை தோராயமாக சேகரித்து, அதைப் பகுப்பாய்வுக்குட்படுத்த உள்ளோம்.
பொது சுகாதாரத் துறை ஆய்வகத்திலேயே அதற்கான வசதிகள் உள்ளன. அந்த பரிசோதனை முடிவுகள் உடனுடக்குடன் தெரியவரும் என்பதால், மக்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சலை எளிதில் வகைப்படுத்தி அறிந்து கொள்ள முடியும்.
தனி நபா் சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுக்கலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.