புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். 5,161 ஏக்கர் பரப்பளவில் 1.6 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையில் நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய 6ஆவது நீர்த்தேக்க ஏரிக்கு மாமல்லன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பக்கிங்காம் கால்வாயின் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை என அவதூறு பரப்புவார்கள், அது உண்மையில்லை. 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளின் விவரங்களை அவர் பட்டியலிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தபின் கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி வருகிறது. காவிரிப் படுகை பகுதிகளில் ரூ.459 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை உள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்தை சாத்தியமாக்கியது திமுக அரசு. 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து இந்த மாமல்லன் ஏரி அமையவுள்ளது. 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்.
ஏரியைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு இதில் மீன்பிடிக்க மீன்பிடி உரிமம் வழங்கப்படும். சென்னையின் புதிய அடையாளங்களாக உருவெடுத்துள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கவே இந்த நீர்த்தேக்கம். நிதி மேலாண்மைபோல் நீர் மேலாண்மையும் அவசியம் என்பதை உணர்ந்து அரசு செயல்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.