ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை வருகைதந்த ஆளுநர் ஆர்.என். ரவி, முதலில் தமிழ்த் தாய் பாடல் இசைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சிறிது நேரம் ஆளுநர் காத்திருந்த நிலையில், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து உரையைப் படிக்க மறுத்த ஆளுநர், பேரவையைவிட்டு வெளியேறினார்.
இதனையடுத்து, ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, சட்டப்பேரவை விதி 17ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையைப் பேரவையில் படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளதை இப்பேரவை ஏற்கவில்லை. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட, சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்டதாக இப்பேரவைக் கருதுகிறது. அவ்வாறே அவைக் குறிப்பில் நடவடிக்கைக் குறிப்புகள் இடம் பெறலாம்.
மேலும், மரபுவழி நிகழ்வுகள், பேரவைத் தலைவரால் படிக்கப்பெறவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம், அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம் பெறலாம் என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” என்றார்.
பின்னர், அவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.