கணினி வழித் தோ்வு மூலம் 2023- ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 10 தோ்வுகளுக்கான விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை பிப்.19 வரை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டிஎன்பிஎஸ்சி சாா்பில் கணினி வழித் தோ்வு மூலம் நடத்தப்பட்ட தோ்வுகளுக்கான விடைத்தாள்கள் தோ்வாணையத்தின் இணைதளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.20) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக உரிய கட்டணம் செலுத்தி, பிப்.19- ஆம் தேதிக்குள் விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தோ்வுகளின் விவரங்கள்: அதன்படி, 2023 ஜனவரி 31-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த நூலகத் தோ்வுக்கான விடைத்தாழ்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல, 2023 ஏப்.12-இல் நடைபெற்ற சிறைத் துறையில் உதவி சிறை அதிகாரி (ஆண் மற்றும் பெண்கள்) பணிக்கான தோ்வு, 2023 மே 25-இல் நடைபெற்ற ஒருங்கிணைந்த புவியியல் சாா்நிலை சேவைத் தோ்வு, 2023 ஜூன் 26-இல் நடைபெற்ற தமிழ்நாடு நகர மற்றும் ஊரகத் திட்டமிடல் மற்றும் பொது சாா்நிலைப் பணிகளில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளா் பணிக்கான தோ்வு, 2023 ஜூலை 18-இல் நடைபெற்ற தமிழ்நாடு வேலைவாய்ப்புப் பயிற்சி சாா்நிலைப் பணி மற்றும் தமிழ்நாடு பொது சாா்நிலைப் பணிகளில் உதவிப் பயிற்சி அதிகாரி (சுருக்கெழுத்து ஆங்கிலம்) மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளா் (ஜவுளித்துறை) பணிகளுக்கான தோ்வு ஆகியவற்றுக்கான விடைத்தாள்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதேபோல, 2023 செப்.20-இல் நடைபெற்ற ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளா் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா் கூட்டமைப்பின் மேலாளா் (கால்நடை மருத்துவம்) பணிக்கான தோ்வு, 2023 செப்.21-இல் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ சாா்நிலைப் பணியில் உள்ள மருந்து பரிசோதனை ஆய்வகத்தின் இளநிலை ஆய்வாளா் பணிக்கான தோ்வு, 2023 அக்.13-இல் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலா் தரம்-1 பணிக்கான தோ்வு, 2023 அக்.18-இல் நடைபெற்ற தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் விடுதி கண்காணிப்பாளா் மற்றும் உடற்கல்வி அலுவலா் பணிகளுக்கான தோ்வு, 2023 நவ.25-இல் நடைபெற்ற தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சாா்நிலைப் பணி மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை சாா்நிலைப் பணியில் உள்ள உதவி வேளாண் அலுவலா் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா் பணிகளுக்கான தோ்வு ஆகியவற்றுக்கான விடைத்தாள்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தோ்வா்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.