ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் மோதல் இருப்பதைப்போல திமுக அரசு உருவகப்படுத்த முயற்சிப்பதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டினார்.
சட்டப்பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய கீதம் இசைக்காவிட்டால் உரையை வாசிக்காமலேயே பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறி விடுவார் என்று, முன்கூட்டியே திட்டமிட்டு இந்த நிகழ்வை அரசு நடத்தியுள்ளது. இதற்காக முன்கூட்டியே பதில் உரையையும் முதல்வர் தயாரித்து வைத்திருக்கிறார். ஆளுநர், உரையை வாசிக்கவிடக்கூடாது என்பதே அவர்கள் எண்ணம்.
பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசும் விடியோ மற்றும் ஆடியோக்கள் பலமுறை நிறுத்தப்பட்டுள்ளன. எந்த செய்தியும் மக்களுக்கு தெரியக்கூடாது என அரசு நினைக்கிறது.
ஆளுநருக்கான உரை முன்கூட்டியே அவருக்கு அனுப்பப்படும். அப்போதே அதற்கான மாற்றுக் கருத்துகள் குறித்து அடையாளப்படுத்தி அவர் தயார் செய்திருக்கிறார். இதனாலேயே ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் மாளிகையிலிருந்து அதற்கான பதில் அறிக்கை வெளியிடப்பட்டது.
பேரவையில் ஆளுநர் பேசி முடித்தவுடன் ஒலிவாங்கி (மைக்) அணைக்கப்பட்டதும் அவர் அமர்ந்து விட்டார். கூட்டம் தொடங்கும் போதே தேசிய கீதம் இசைக்க வேண்டும் என ஆளுநர் கேட்கிறார். மாநில அரசு இதை ஏற்க மறுக்கிறது. ஏன் இந்த பிடிவாதம்? தமிழ்த் தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது ஆளுநரின் நோக்கம். ஆளுநர் தொடர்பான விஷயங்களில் இணக்கமான போக்கு நிலவுவதை அரசு விரும்பவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் இருப்பதை போல அரசு உருவகப்படுத்த திமுக அரசு நினைக்கிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.