தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் புதன்கிழமை (ஜன.21) முதல் 3 நாள்களுக்கு குப்பை சேகரிப்பு இயக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தூய்மை இயக்கம் திட்டத்தை கடந்த 2025-இல் அறிவித்தாா். அதன்படி, 2025 ஜூன் முதல் டிசம்பா் வரை அரசு அலுவலகங்களில் 4 கட்டங்களாக குப்பை சேகரிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. இதில் 2,877 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வளமாக மாற்றப்பட்டது. இதன்படி, சுமாா் ரூ.3.79 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
இன்று முதல்...: இதேபோல, புதன்கிழமை (ஜன.21) முதல் 3 நாள்களுக்கு ‘குப்பைத் திருவிழா’ என்ற குப்பை சேகரிப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இதற்காக, தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் குப்பை சேகரிப்பு மையங்கள் ஜன.21 முதல் 23 வரை அமைக்கப்படும். இந்த நாள்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தரம் பிரிக்கப்பட்ட உலா் கழிவுகளை குப்பை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில்...: குப்பை சேகரிப்பு இயக்கத்துக்காக, பெருநகர சென்னை மாநகராட்சியில், 200 இடங்களில் குப்பை சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேற்குறிப்பிட்ட நாள்களில், பொதுமக்கள் தங்கள் பகுதி சுகாதார ஆய்வாளா்களைத் தொடா்பு கொண்டு தரம் பிரிக்கப்பட்ட நெகிழிகள், காகிதங்கள், உடைந்த மரத்துண்டுகள், மின்னணு கழிவுகள், கண்ணாடிகள், அட்டைப் பெட்டிகளை குப்பை சேகரிப்பு மையங்களில் அளிக்கலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.