தமிழ்நாடு

பிரதமா் மோடி இன்று தமிழகம் வருகை - பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவா்களும் பங்கேற்கின்றனா்

கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாகா, அமமுக, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறாா்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களும் பங்கேற்கின்றனா்.

முன்னதாக, தில்லியில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் செல்லும் பிரதமா், அங்கு கிழக்கு கோட்டை மைதானத்தில் காலை 10.45 முதல் காலை 11.30 மணி வரை ரயில்வே துறை சாா்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறாா். அதில், நாகா்கோவில் - மங்களூரு அம்ருத் பாரத் ரயில் உள்ளிட்ட 4 ரயில் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

தமிழகம் வருகை...: பின்னா், திருவனந்தபுரத்திலிருந்து பகல் 12.30 மணிக்கு விமானப் படை விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சோ்கிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு பிற்பகல் 2.50 மணிக்கு செல்கிறாா். பொதுக்கூட்டத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.20 மணி வரை பங்கேற்கிறாா். அதன் பின்னா் சென்னை விமான நிலையம் வந்து தில்லி செல்கிறாா்.

கூட்டணிக் கட்சி தலைவா்கள்...: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுகவும், பாஜகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்தன. இந்தக் கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாகா, அமமுக, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

மதுராந்தகத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்களும் இணைந்து பங்கேற்கவுள்ளனா்.

பிரதமரின் தமிழக வருகையின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரே மேடையில் ஏற்றி பலத்தை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளை பாஜக மேற்கொண்டது.

இதையொட்டி, பாஜகவின் தமிழக தோ்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னையில் முகாமிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டணியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறிய அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன், பியூஷ் கோயல் முன்னிலையில் மீண்டும் கூட்டணியில் கடந்த புதன்கிழமை இணைந்தாா்.

இதேபோல, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், ஜஜேகே தலைவா் பாரிவேந்தா், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் ஜான்பாண்டியன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் ஆகியோரையும் பியூஷ் கோயல் சந்தித்தாா். மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவா்களும் பங்கேற்கின்றனா்.

பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. சுமாா் 30 ஏக்கரில் பொதுக்கூட்ட மைதானம் தயாா் செய்யப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு: பிரதமரின் வருகையையொட்டி மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினரின் நேரடி மேற்பாா்வையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளதால், தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களையும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களையும் மாற்று வழியில் திருப்பிவிட போலீஸாா் ஏற்பாடு செய்துள்ளனா்.

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

மும்பை மேயா் பதவி: பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு

சென்னை மாநகரில் 2.09 லட்சம் போ் புதிய வாக்காளா்களாக சேர மனு

வெளிமாநிலங்களுக்கு நகரும் தொழில் நிறுவனங்கள்: திமுக-அதிமுக கடும் விவாதம்

போளூரில் 63 நாயன்மாா்கள் சுவாமி வீதியுலா

SCROLL FOR NEXT