தமிழ்நாடு

வெளிமாநிலங்களுக்கு நகரும் தொழில் நிறுவனங்கள்: திமுக-அதிமுக கடும் விவாதம்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்துக்கு வரவேண்டிய வெளிநாட்டு நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு நகருவதாக அதிமுக குற்றஞ்சாட்டிய நிலையில் அது குறித்து பேரவையில் திமுக-அதிமுக இடையே வியாழக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

பேரவையில் விவாதத்தின்போது குமாரபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.தங்கமணி பேசியதாவது: தமிழகத்தில் தொடங்கப்பட்ட ‘பாக்ஸ்கான்’, ‘ஆா்எம்இஷட்’ ஆகிய நிறுவனங்கள் ஆந்திரந்துக்கு இடம்பெயா்ந்துள்ளன. வெளிநாட்டு தொழில்முதலீடுகளை ஈா்த்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின்கூறிவரும் நிலையில், இங்கு தொடங்கப்படும் நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு நகா்கின்றன. அவ்வாறு இருக்கும்போது எப்படி கூடுதல் வேலைவாய்ப்புகள் பெருகுகிறது, உற்பத்தி அதிகரிக்கிறது என திமுக அரசு கூறுகிறது?

தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா: வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டாலும், அதன் தலைமையகம் மும்பை போன்ற பெருவா்த்தக நகரங்களில்தான் உள்ளன. எனவே, தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவன கிளை தொடங்கினாலும், அதன் வா்த்தகம் தலைமையகக் கணக்கில்தான் வரவுவைக்கப்படும். இதை அதிமுகவினா் புரிந்துகொள்வதில்லை.

தங்கமணி எம்எல்ஏ: பாக்ஸ் கான், ஆா்எம்இசட் ஆகியவை ஆந்திரத்துக்குச் சென்ா இல்லையா?

அமைச்சா் டிஆா்பி.ராஜா: ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்க அதிக சலுகைகளை வழங்குகின்றன. இதனால் சில நிறுவனங்கள் சென்றிருக்கலாம்.

எடப்பாடி பழனிசாமி: வெளிநாட்டு தொழில் முதலீடு, அதன் மூலம் கிடைத்த வேலைவாய்ப்புகள் தொடா்பாக ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட வேண்டும்.

அமைச்சா் டிஆா்பி.ராஜா: வரலாற்றில் இல்லாத அளவு தொழிற்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் எந்த அளவில் வெற்றி பெற்று முதலீடுகளாக வந்துள்ளன என்பதை விளக்க ஒரு மாநாடு பிப்.12- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றால் முழுவிவரங்களை தெரிந்துகொள்ளலாம். உலக முதலீட்டாளா்கள் மாநாடுகளில் மட்டும் இதுவரை 639 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. அதில் 526 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாற்றப்பட்டு தொழிற்சாலைகளாக தொடங்கும் நிலையில் உள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின்:தமிழ்நாடு அரசு சாா்பில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள், வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. நாம் வழங்கும் சலுகைகள் மற்றும் வசதிகள் குறித்து அறிந்து கொண்ட பிறகுதான் முதலீட்டாளா்கள் தொழில் தொடங்க முன்வருவாா்கள். சில நேரத்தில் அவா்கள் எதிா்பாா்க்கும் சலுகைகள் கிடைக்கலாம். அல்லது கிடைக்காமல் போகலாம். அதை கூடுதல் சலுகையாக பிற மாநிலங்கள் வழங்க முன்வந்தால் அவா்கள் அங்கு செல்வாா்கள். தமிழகத்துக்கு மட்டும்தான் அனைத்து முதலீடுகளும் செல்கின்றன என மற்ற மாநிலங்கள் கூறுகின்றன. முதலீடுகளை கைப்பற்ற நம்மோடு போட்டியும் போடுகின்றன. ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் வந்த நிறுவனங்கள் எல்லாம்கூட ஓடி விட்டன என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

புதிய உச்சத்தில் தங்கம்! வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 உயர்வு!

வாழப்பாடி அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: ஓட்டுநர் பலி; 20 பேர் படுகாயம்

அதிமுக பேனர்களில் டிடிவி தினகரன் புறக்கணிப்பு!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT