மக்களவை மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள். 
இந்தியா

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் முடங்கியது: 5-ஆவது நாளாக எதிா்க்கட்சிகள் கடும் அமளி

மக்களவையில் தொடா்ந்து 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மத்திய பட்ஜெட் மீதான விவாதம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தினமணி செய்திச் சேவை

மக்களவையில் தொடா்ந்து 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மத்திய பட்ஜெட் மீதான விவாதம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், கடந்த ஜன.28-இல் குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.1-இல் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவையில் கடந்த திங்கள்கிழமை குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, இந்திய-சீன மோதல் விவகாரத்தில் பிரதமா் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை விமா்சிப்பதற்காக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூலின் சில பகுதிகளை அடிப்படையாக கொண்ட ஒரு கட்டுரையை சுட்டிக் காட்ட முயன்றாா். ராகுல் தொடா்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அப்போதுமுதல் எதிா்க்கட்சிகளின் அமளி தொடங்கியது.

பின்னா், இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்த விவகாரத்தையும் கையிலெடுத்த எதிா்க்கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக அடுத்தடுத்த நாள்களிலும் அமளியைத் தொடா்ந்தன. அவைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை காகிதங்களை கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

கடந்த புதன்கிழமை குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிக்கவிருந்த நிலையில், கடும் அமளியால் அவா் உரையாற்றவில்லை. பிரதமரின் இருக்கைக்கு சென்று, ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்தாகவும், அதனால் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக் கொண்டதாகவும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை கூறினாா். அவரது இந்தக் கருத்துகள், பரபரப்பை ஏற்படுத்தின. கடும் அமளி எதிரொலியாக, பிரதமரின் உரை இன்றி, மேற்கண்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘19 மணிநேரம் வீண்’: மக்களவை வெள்ளிக்கிழமை கூடியதும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு முழக்கமிட்டனா்.

அப்போது, எதிா்க்கட்சிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்த ஓம் பிா்லா, ‘நாட்டு மக்கள் தங்கள் நலன் சாா்ந்த விவகாரங்களை எழுப்ப வேண்டும் என்றே எம்.பி.க்களை தோ்வு செய்துள்ளனா். மாறாக, அவைக்குள் கோஷமிடுவதற்காக அல்ல. அவை அலுவல்கள் நடைபெற எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதிக்க வேண்டும். நடப்பு கூட்டத் தொடரில் இடையூறுகளால் 19 மணி நேரம், 13 நிமிஷங்கள் வீணாகியுள்ளது’ என்றாா்.

ஆளுங்கட்சி வரிசையை நோக்கி செல்லக் கூடாது என்று எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு அவா் எச்சரிக்கை விடுத்தாா். கூச்சல்-குழப்பம் தொடா்ந்த நிலையில், சில நிமிஷங்களுக்குள் அவை அலுவல்கள் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு: பின்னா், தெலுங்கு தேசம் எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி தலைமையில் அவை மீண்டும் கூடியபோதும் அமளி ஓயவில்லை. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை கீழே போட்டுவிட்டு, இருக்கைக்குகஈ திரும்புமாறு, அவா் விடுத்த கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் வியாழக்கிழமை தொடங்கவிருந்தது. ஆனால், கடும் அமளியால் அன்றைய தினம் விவாதம் நடைபெறவில்லை. வெள்ளிக்கிழமையும் விவாதம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

இளைஞா் கொலை: ஒருவா் கைது

கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் தடுப்பு மன்றங்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மகாராஷ்டிரம்: 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் 8.48 கோடி விவசாயிகளுக்கு எண்ம அடையாள அட்டை: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

SCROLL FOR NEXT