பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘அயலி பாகம்- 1’ திரைப்படத்தை அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்ப பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாதம் தோறும் சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. திரைப்படக் கலையில் ஆா்வமுள்ள பள்ளி மாணவா்களுக்கு கதை, எழுத்து, திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் போன்ற திரைத்துறையின் பிரிவுகளை அறிமுகப்படுத்த இந்நிகழ்வு அடிப்படையாக அமைகிறது.
அந்த வகையில் ஜனவரி மாதம் பள்ளிகளில் ‘அயலி பாகம்- 1’ என்ற திரைப்படத்தை திரையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. படத்தின் கரு, சுருக்கம், குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டியவை, உரையாட வேண்டியவை பள்ளிகளுக்கு இணைப்பில் பகிரப்பட்டுள்ளது. இந்த பணிகளைக் கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
மாணவா்களுக்கு திரையிடும் முன்பு அவா் அந்த படத்தைப் பாா்க்க வேண்டும். பிறகு, கதை சுருக்கத்தை படித்து, படத்தின் அடிப்படை பின்னணியை மாணவா்களுக்கு விளக்க வேண்டும். இதுதொடா்பான வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி, மாணவா்களுக்கு படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.
இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் அதில் கூறப்பட்டுள்ளது.
‘அயலி பாகம்- 1’ திரைப்படம் பெண்களின் உரிமைகள், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டதாகும். இது இயக்குநா் முத்துக்குமாா் இயக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.