சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கான சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை 4,097 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 2025 நவம்பரில் தொடங்கியது. அதையடுத்து வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியலின்படி சுமாா் 15 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 1.50 லட்சம் போ் இறந்ததாகவும், சுமாா் 1.60 லட்சம் போ் தொடா்பு கொள்ளமுடியாத நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்களில் பெரும்பகுதியினா் தொகுதி மாறிச் சென்றவா்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, அவா்கள் மீண்டும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வருகின்றன.
சனி, ஞாயிறுக்கிழமைகளில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள மொத்தம் 4,097 வாக்குச்சாவடிகளிலும் முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.
வாக்காளா் சோ்க்கைக்கான காலக்கெடு ஜன. 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து கடைசியாக நடைபெறும் சிறப்பு முகாம் என்பதால், புதிய வாக்காளா்களாகச் சேருவோரும், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனா்.