நமது நிருபர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியது, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பெயர் மாற்ற விவகாரத்தை தீவிரமாக எழுப்புவோம் என்று தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை (ஜன. 28) தொடங்குகிறது. இதையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, அதிமுக குழுத் தலைவர் மு.தம்பிதுரை, காங்கிரஸ் தலைமைக் கொறடா மாணிக்கம் தாகூர், தமாக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் டி.ஆர். பாலு, திருச்சி சிவா ஆகியோர் கூறியதாவது: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகம் தொடர்புடைய பல்வேறு பிரச்னைகளை எடுத்துரைத்தோம். சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளில் அரசு தயாரிக்கும் உரையை ஆளுநர் அப்படியே வாசிப்பது என்பது காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை. அதை மீறும் வகையில் தமிழக ஆளுநர் உரிய காரணமின்றி அவையில் இருந்து வெளியேறுகிறார். அரமைப்புச்சட்டத்துக்கு முரணான இந்த செயல் குறித்து அவையில் விவாதிக்க கேட்டுக்கொண்டுள்ளோம்.
மேலும், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஒசூர் விமான நிலையத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தர மறுப்பது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர்
ராஜ்நாத் சிங்கை விரைவில் சந்திக்க உள்ளோம்.
கச்சத்தீவை இலங்கைக்கு அளித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக அவையில் பிரச்னை எழுப்ப உள்ளோம். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை விபி ஜி ராம் ஜி என்ற பெயரில் கொண்டு வந்துள்ளனர். இத்திட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பு அளிப்பதால் திரும்பப் பெற வேண்டும், பழைய பெயரிலேயே செயல்பட வேண்டும்; இந்தப் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்றனர்.
மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்): மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மாற்றப்பட்ட நடவடிக்கைக்கு வரும் கூட்டத்தொடரில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம். இச்சட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாக உள்ளது.
வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஐஆர்) என்பது மிகப் பெரிய சதியாகும். ஏழை மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாக உள்ளது.
இதை கூட்டத்தொடரில் கண்டிக்க உள்ளோம்.
அதேபோன்று, மாநில அரசின் நிதியை நிறுத்திவைப்பதற்கும், சட்டப்பேரவைகளில் இருந்து வெளிநடப்பு செய்யும் ஆளுநர்களின் செயல்களையும் கடுமையாக எதிர்க்கிறோம். ஏற்றுமதி வரி விவகாரம், வெளியுறவுக் கொள்கை குழப்பம், ஆரவல்லி மலைக் குன்றுகள் விவகாரம், விவசாயப் பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.
ஜி.கே. வாசன் (தமாகா): தமிழகத்தில் மாநிலம் தொடர்புடைய பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, மீனவர்கள் விவகாரம், நதி நீர் இணைப்பு, சுற்றுச்சூழல், வேளாண்மை விவகாரம் போன்றவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். ஆனால், நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. சிறிய கட்சிகளுக்கு நேரம் ஒதுக்குவதாக கூறப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை. குறைந்தபட்சம் 7 நிமிஷங்களுக்கு பேசும் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.