முதல்வர் ஸ்டாலின்.  கோப்புப் படம்
தமிழ்நாடு

இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஜவுளி நிறுவனங்களுக்கு 20% மானியம்! - முதல்வர் அறிவிப்பு

கோவையில் முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

ஜவுளி நிறுவனங்களுக்கு, அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 விழுக்காடு மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகரின் கொடீசியா வளாகத்தில் துணிநூல்  துறை மற்றும் இந்திய  தொழில் கூட்டமைப்பு  இணைந்து நடத்தும் 'முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360' இன்று(ஜன. 29) தொடங்கியது. இன்றும் நாளையும் என இரு நாள்கள் மாநாடு நடைபெறுகிறது.

முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360

இம்மாநாட்டில்  துணை முதல்வர் மற்றும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி முன்னிலையில் ஜவுளித் தொழிலில் சுமார் 915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது ஜவுளித் துறைக்கு சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

"தொழில் வளத்திற்கும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் புகழ்பெற்ற தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில், சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு முதன்முறையாக நடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்! இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. அதுவும், தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு என்னவென்றால் இங்கு சமூகநீதியும் காப்பாற்றப்படுகிறது; அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியையும் சாதித்து காட்டிக்கொண்டு இருக்கிறோம்! 

அதனால்தான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஆட்டோமொபைல், ஐ.டி., காலணி உற்பத்தி, மின்னணுப் பொருள்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது! அதுவும், ஜவுளித்துறையை பொருத்தவரையில், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக, ‘இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்’ என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. 

இந்தியாவின் ஜவுளி வணிகத்தில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 33 விழுக்காடு! நேரடியாக, 31 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டின் ஜவுளித்துறை வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதில், 60.12 விழுக்காடு பெண் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். 

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் துணிநூல் துறை என்று தனித் துறையையே உருவாக்கினோம். தொழில்நுட்ப ஜவுளித்துறையில் முதலீடுகளை ஈர்க்க சென்னை மற்றும் கோவையில் இரண்டு கருத்தரங்குகளை நடத்தினோம். இப்படி, பல முயற்சிகளை எடுத்து இந்த துறையின் வளர்ச்சிக்கு உழைக்கும் அமைச்சர் காந்திக்கும், துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துக்கள்!

இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்திருக்கிறார். இந்த துறையின் வளர்ச்சிக்காக, நம்முடைய அரசு இதுவரை செய்திருக்கும் திட்டங்கள், சலுகைகள், சாதனைகளை எல்லாம், அவர் உங்களிடம் விரிவாக பகிர்ந்துகொள்வார். அந்த சாதனைகளின் தொடர்ச்சியாக, இந்த மாநாடு மூலமாக தமிழ்நாட்டில் ஜவுளித் துறையின் வலுவான கட்டமைப்பு பற்றி உலக வாடிக்கையாளர்களுக்கு சென்று சேர வேண்டும்! சர்வதேச முதலீடுகளை ஈர்க்க வேண்டும்! இதுதான் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்.

அமெரிக்கா விதித்திருக்கும் 50 விழுக்காடு வரியால் பெரிய அளவில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்து மீண்டு, புதிய சந்தைகளை கண்டறிவது, வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நடத்துவது, பருத்திக்கான 11 விழுக்காடு இறக்குமதி வரியை நீக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவது போன்ற பல முயற்சிகளை நாம் செய்து வருகிறோம்! 

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது! ஜவுளித் தொழிலுக்கான கண்காட்சி, ஃபேஷன் ஷோ, வாங்குவோர் – விற்போர் சந்திப்பு, கருத்தரங்குகள், விருதுநகரில் அமையவுள்ள பிரதமர் மந்திரி மித்ரா ஜவுளிப் பூங்கா தொடர்பான ‘ரோடு-ஷோ’ ஆகியவை நடைபெற இருக்கிறது. 

அண்மையில், கோவை, மதுரை, தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக, ஜவுளித்தொழிலுக்கு மட்டும் 9 ஆயிரத்து 764 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த மாநாட்டிலும், 915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது! 

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் ‘ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை 2025-2026’-யையும் இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு வேலைப்பளு காரணமாக நேரில் வந்து உங்களை சந்திக்க முடியவில்லையென்றாலும், உங்களுக்கான ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று

ஜவுளி நிறுவனங்களுக்கு, அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 விழுக்காடு மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

அதேநேரத்தில், இந்த மாநாட்டில் கூடியிருக்கும் இந்தியா மற்றும், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்க விரும்புகிறேன். 

மிகச்சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து, நீங்களும் வளர்ந்து, தமிழ்நாட்டிற்கும் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் திராவிட மாடலின் பெருங்கனவில், ஜவுளித் தொழில் கணிசமான பங்கு வகிக்க வேண்டும். இந்த மாநாட்டின் வெற்றி அதற்கு பெரிதும் உதவும்" என்று பேசினார்.

MK stalin speech in International Textile Summit 360 at Coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

ஓபிஎஸ்ஸை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT