குதிரை பேரம், ஒட்டகப் பேரம் எதுவும் திமுகவிடம் எடுபடாது: அனிதா ராதாகிருஷ்ணன்
குதிரை பேரம், ஒட்டகப் பேரம் எதுவும் திமுகவிடம் எடுபடாது என்று அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது தொடர்பாக...
சென்னை: குதிரை பேரம், ஒட்டகப் பேரம் எதுவும் திமுகவிடம் எடுபடாது என்று திமுக எம்எல்ஏ அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திமுக எம்எல்ஏ அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கைது நடவடிக்கையின்போது, புதிதாகத் தொடங்கப்பட்ட 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) தரப்பிலிருந்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யுமாறும் கட்சியில் சேருமாறு நெருக்கடி தருகிறார்கள் என அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
Advertisement
Advertisement
திருச்செந்தூா் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். இவா் கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம், மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவா்.
அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கடந்த ஜூன் 20 ஆம் தேதி ஆத்தூரில் நடந்த கலைஞா் பிறந்த நாள் விழா திமுக பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
அப்போது, தவெக அரசின் செயல்பாடுகளை விமா்சித்ததோடு முதல்வா் ஜோசப் விஜய்யை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அவா் மீது ஆத்தூா் நகர தவெக செயலாளா் செல்வமுருகன், காவல்நிலவையத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யை, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஒருமையில் பேசியுள்ளாா் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாா் அளித்திருந்தாா்.
இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் தன்னை போலீஸாா் கைது செய்யக் கூடும் என எதிா்பாா்த்து, உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அனிதா ஆர்ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலகத்தை ஆய்வு செய்தாா். அப்போது அங்கு வந்த ஆத்தூா் ஆய்வாளா் (பொறுப்பு) ரென்னிஸ் தலைமையிலான போலீஸாா், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் முதல்வா் ஜோசப் விஜய்யை, கடந்த 20 ஆம் தேதி ஆத்தூரில் நடந்த திமுக கூட்டத்தில் ஒருமையில் பேசிய குற்றச்சாட்டில் கைது செய்வதாக தெரிவித்தாா். பின்னா் அனிதா ஆர்ராதாகிருஷ்ணன் எனது வழக்குரைஞா் வந்ததும் வருகிறேன் என கூறி அவரது காரில் ஏறினாா். ஆய்வாளா் ரென்னிஸ் அப்படி முடியாது போலீஸ் ஜிப்பில் ஏறுமாறு வற்புறுத்தினாா். பின்னா் அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸாா் அழைத்து கொண்டு போலீஸ் ஜிப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனா் .
6 மணி நேரம் விசாரணை
கைது செய்யப்பட்ட அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வைத்து சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து, அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு உடல் தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து திருச்செந்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த காவல்துறையினா் அழைத்துச் சென்றனா்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன், அடுத்த சிறிது நேரத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தன் மீதான சட்ட நடவடிக்கை, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வைப்பதற்கும், 'தமிழக வெற்றி கழகத்தில்' இணையுமாறு வற்புறுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதி என்று அவர் கூறினார்.
தன்னை கைது செய்வதற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் அணுகுமுறைகள் வழக்கமான அரசியல் நகர்வுகளை விட மிகவும் தீவிரமானவை என்று குறிப்பிட்ட அனிதா ராதாகிருஷ்ணன், "எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு குதிரை பேரம் அல்ல, ஒட்டகப் பேரம்; அது ஒருபோதும் நடக்காது," விஜய்யை மட்டுமல்லை, யாரையும் எதிர்ப்போம். காவல்துறை அராஜகம் செய்கிறது என்று கூறினார்.
தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள், மேலிடத்திலிருந்து சொல்லி, தனது சட்டப் பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய கட்டாயப்படுத்தினா். நான் முடியாது என்றேன். நான் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் செய்வேன். எவராலும் தொட்டுப் பாா்க்க முடியாது. நான் தொடர்ந்து திமுகவிலேயே இருப்பேன், கட்சியை விட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை... எந்தவொரு அழுத்தத்திற்கும் நான் ஒருபோதும் பணியமாட்டேன். தனது அரசியல் வாழ்க்கை பண ஆதாயத்திற்காக அல்லாமல், பல தசாப்த கால கட்சிப் பணியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. நான் தவறு செய்யாதவன். தவறு செய்யாதவனை பொய் வழக்கு போட்டு அடக்க முடியும் என்று நினைத்தால் ஒரு காலமும் அடக்க முடியாது என்றாா் அவா்.
அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி, பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) 2023-ன் பிரிவு 352 மற்றும் 353(2)-ன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 41ஏ-ன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸை ஏற்று ஜூலை 10 ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவதாகத் தான் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், அதிகாரிகளை அச்சுறுத்தும் உத்தியாகத் தன்னை உடனடியாகக் கைது செய்யவே இந்த நடைமுறை என்று ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
இந்தக் கைது நடவடிக்கை மாநிலத்தின் அரசியல் வட்டாரங்களில் பரவலான கருத்து மோதல்களைத் தூண்டியுள்ளது.
கண்ணியம் இருக்க வேண்டும்
இந்த சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர், இது அரசியல் விவாதங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார். "அரசியல் தலைவர்கள் குறித்து பேசுவதிலும், அவர்கள் மீது விமர்சனங்களை முன்வைப்பதிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்," என்று தாக்கூர் கூறினார்.
It was not horse-trading, but camel-trading that was offered to me; it will never happen...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.