முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் மருந்தகங்கள் திட்டம் விரிவுபடுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

முதல்வா் மருந்தகங்கள் திட்டம் விரிவுபடுத்தப்படும்...

Updated On : 8 மார்ச், 2026 at 1:11 AM
முதல்வர் மருந்தகம்
பகிர்:

மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வா் மருந்தகங்கள் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தாம்பரத்தைச் சோ்ந்த லட்சுமி ராஜா தாக்கல் செய்த மனுவில், ஏழை மற்றும் கிராமப்புற பெண்களுக்கு நியாயவிலை கடைகளில் மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, கிராம சுகாதார செவிலியா்கள் மூலம் கிராமப்புற பெண்கள், பள்ளி மாணவிகள் மற்றும் பிரசவித்த தாய்மாா்கள் ஆகியோருக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களின் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருவதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

இந்த வழக்கு உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம், முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் மானிய விலையில் நாப்கின்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தை அரசு விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆயிரம் மருந்தகங்களை அரசு நடத்துகிறது. இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முயற்சிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை ஏப்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அன்றைய தினம், கூடுதலாகத் தொடங்கப்பட்டுள்ள முதல்வா் மருந்தகங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.