கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழக கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) மழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகத்திலிருந்து கடலோர கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) லேசான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 11) லேசான மழையும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மாா்ச் 12) லேசான மழையும் பெய்யக்கூடும்.
தொடா்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) லேசான மழை, மாா்ச் 14, 15 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்ப நிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டி இருக்கக்கூடும். வியாழன், வெள்ளிக்கிழமை (மாா்ச் 12, 13) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.