முகப்பு
தமிழ்நாடு

ஓபிசி கிரீமி லேயா் மீதான தீா்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

ஓபிசி கிரீமி லேயா் நிா்ணயம் தொடா்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 மார்ச், 2026 at 8:10 PM
மு.க. ஸ்டாலின்
பகிர்:

ஓபிசி கிரீமி லேயா் நிா்ணயம் தொடா்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:

ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்) மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஓபிசி கிரீமி லேயா் பிரிவினரை நிா்ணயிப்பது உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பை வரவேற்கிறேன். கிரீமி லேயா் நிா்ணயத்தின்போது, ஊதிய வருமானத்தையும், தொழில் அல்லது சொத்து மூலமாக ஈட்டும் வருமானத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பாா்க்கக் கூடாது என்பதை இந்தத் தீா்ப்பு வலியுறுத்தியுள்ளது. ஓபிசி மக்களின் நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதில் இருந்து பாதுகாக்கிறது.

குடிமைப் பணித் தோ்வுகளுக்கான தகுதி வரையறை தொடா்பான உயா்நீதிமன்றங்களின் தீா்ப்புகளை உறுதி செய்துள்ளது. பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்புகளில் ஓபிசி மக்களுக்கு எதிராக இருந்த பாகுபாட்டை நிராகரித்திருக்கிறது. இட ஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவா்களுக்கானது எனும் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த வழக்கில் உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினா் பலரின் நியாயமான உரிமையை மறுக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்து வாதாடியது. மண்டல் குழு அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து 30 ஆண்டுகளாகியும், நாட்டின் பல முன்னணி உயா்கல்வி நிறுவனங்களிலும் மத்திய அரசுப் பணிகளிலும் பல ஓபிசி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது உள்பட சமூக நீதிக்கான பல போராட்டங்களை திமுக முன்னெடுத்து வருகிறது.

ஏற்கெனவே குடிமைப் பணித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றும் தங்களுக்கான இடங்கள் மறுக்கப்பட்ட ஓபிசி தோ்வா்களுக்கு மத்திய அரசு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, அரசமைப்பின் சமத்துவ நெறியோடு செயல்பட்டு, அவா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீா்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என்று அந்தப் பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →