முகப்பு
தமிழ்நாடு

ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!

பெற்றோரின் வருமானத்தை மட்டும் கருத்தில்கொண்டு, ஓபிசி பிரிவினரை வசதி படைத்தோராக தீர்மானிக்கக் கூடாது என்ற தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு

Updated On : 12 மார்ச், 2026 at 7:10 PM
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

பெற்றோரின் வருமானத்தை மட்டும் கருத்தில்கொண்டு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வசதி படைத்தோராக தீர்மானிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 'கிரீமி லேயர்' (ஓபிசி பிரிவினரில் சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களைக் குறிக்கும் சொல். இவர்கள் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெற தகுதியற்றவர்களாகக் கருதப்படுவர்) தகுதியை பெற்றோரின் வருமானத்தை மட்டும் கொண்டு தீர்மானிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் "பல வருட போராட்டங்களுக்குப் பிறகு ஓபிசி பிரிவினருக்கான நீதிக்கு ஒரு வெற்றி. ஓபிசி அல்லாத கிரீமி அடுக்கு தீர்மானத்தை தெளிவுபடுத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.

Advertisement

கிரீமி லேயர் தகுதியைத் தீர்மானிக்கும்போது,

சம்பள வருமானத்தை வணிகம் அல்லது சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்குச் சமமாகக் கருத முடியாது. இதன் மூலம் உண்மையான ஓபிசி பிரிவினர் இட ஒதுக்கீட்டிலிருந்து தவறான முறையில் வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர். பல்வேறு வேலைவாய்ப்புத் துறைகளில் பாரபட்சமான பாகுபாட்டை நிராகரிக்கிறது.

சமூகரீதியாக பின் தங்கிய நிலையைச் சரிசெய்வதே இட ஒதுக்கீட்டின் குறிக்கோள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இருப்பினும், பல உண்மையான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெளியேற்றப்படக்கூடிய நிலைப்பாட்டைத்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் (என்டிஏ) விரும்புகின்றனர்.

மேலும், இட ஒதுக்கீட்டின் அரசியலமைப்பு அடிப்படையிலிருந்து விலகி, ஈடபிள்யூஎஸ் (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) ஒதுக்கீட்டை என்டிஏ அறிமுகப்படுத்தியது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்ப்படுத்தப்பட்டு, முப்பது ஆண்டுகள் கடந்தும்கூட, நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களிலும் மத்திய அரசிலும் பல ஓபிசி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.

மருத்துவ இடங்களின் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகித ஓபிசி இட ஒதுக்கீட்டைப் பெறுவது உள்பட சமூக நீதிக்காக திமுக தொடர்ந்து போராடி வருகிறது. சமூக நீதிக்கான எங்கள் முயற்சி தொடர்கிறது.

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தங்களுக்குரிய இடத்தைப் பெற முடியாத ஓபிசி பிரிவினருக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும், இந்த அநீதியை அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டின்படி சரிசெய்யவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Creamy layer eligibility for OBC category: Chief Minister Stalin supports the Supreme Court decision

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.