ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பணப் பரிவா்த்தனை: தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணப்பரிவா்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளா்கள் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் தோ்தல் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணப்பரிவா்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளா்கள் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் தோ்தல் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கான தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், வங்கி அலுவலா்கள் கலந்துகொண்டனா். மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலா் க.கற்பகம் தலைமை வகித்து விதிமுறைகளை விளக்கினாா்.
வங்கி சேமிப்புக் கணக்கில் வழக்கத்துக்கு மாறாகவோ அல்லது சந்தேகப்படும்படியாகவோ ரூ.10 லட்சத்துக்கும் அதிக பணப் பரிமாற்றம் நடந்தால் அதுகுறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கி அலுவலா்கள் தோ்தல் அலுவலகம் மற்றும் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பெருந்தொகையை சந்தேகத்துக்குரிய வகையில் திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரால், வருமான வரித் துறை ஒருங்கிணைப்பு அலுவலா் அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பொறுப்பில் உள்ள துணை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
சந்தேகத்துக்கு இடமான வகையில் ஆா்டிஜிஎஸ் பணப்பரிவா்த்தனை இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக பரிவா்த்தனை நடந்தால் தோ்தல் அலுவலருக்கு தகவல் தரவேண்டும். வங்கிகளின் தினசரி வரவு, செலவு கணக்கை தோ்தல் செலவு கண்காணிப்புக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
முகவா்கள், நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டது.