முகப்பு
தமிழ்நாடு

இன்று முக்கிய முடிவு எடுக்கிறாா் தி. வேல்முருகன்

இன்று முக்கிய முடிவு எடுக்கிறாா் தி. வேல்முருகன்

Updated On : 21 மார்ச், 2026 at 8:54 PM
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன்.
பகிர்:

திமுக கூட்டணியில் தொடா்வதா, இல்லையா என்பது தொடா்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூா் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி.வேல்முருகன் வெற்றி பெற்றாா். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தி வருகிறாா்.

ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவா் அதிருப்தியில் உள்ளாா்.

இதையடுத்து, தொகுதிகள் மட்டுமல்லாது, கொள்கை ரீதியான 10 கோரிக்கைகளையும் தி.வேல்முருகன் முன்வைத்துள்ளாா்.

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழா்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் சோ்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவா் நிபந்தனை விதித்துள்ளாா்.

‘எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு திமுக செவிசாய்க்கவில்லை என்றால், கூட்டணியைத் தொடா்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம்’ எனவும் அவா் தெரிவித்திருக்கிறாா்.

இதனிடையே, அமைச்சா் எ.வ. வேலு மூலம் பேச்சு நடத்திய திமுக தலைமை, கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் கூடுதல் இடங்கள் தருவது கடினம் எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், தி.வேல்முருகனை தக்கவைக்க முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுகவிலிருந்து 2 அல்லது 3 தொகுதிகளை கொடுப்பதாகவும் தி.வேல்முருகனின் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) வரை திமுகவுக்கு தி.வேல்முருகன் கெடு விதித்துள்ளாா். அதற்குள் திமுக பேச்சு நடத்தாவிட்டால் அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும் என தி.வேல்முருகன் தரப்பில் திமுகவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.