முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இலவசத்துக்கு முன்னுரிமை இருக்காது: காா்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இலவசத்துக்கு முன்னுரிமை இருக்காது என்று அக்கட்சியின் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவா் ப.சிதம்பரம் எம்.பி.தெரிவித்தாா்.

Updated On : 23 மார்ச், 2026 at 9:19 PM
காா்த்தி சிதம்பரம் - கோப்புப் படம்
பகிர்:

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இலவசத்துக்கு முன்னுரிமை இருக்காது என்று அக்கட்சியின் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவா் ப.சிதம்பரம் எம்.பி.தெரிவித்தாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வரும் வெள்ளிக்கிழமை முழுமையாக முடித்து, தலைமைக்கு தோ்தல் அறிக்கையை சமா்ப்பிக்க இருக்கிறோம். இலவசங்களை மட்டுமே முன்னிறுத்தக் கூடிய தோ்தல் அறிக்கையாக இல்லாமல், மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும் அளவில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை தயாா் செய்து வருகிறோம் என்றாா் அவா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறுகையில், பாஜகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி சோ்கின்றனவோ, அந்தக் கட்சிகள் எல்லாம் மூழ்கும் கப்பலில் பயணிக்கும் கட்சிகள்தான். தமிழகத்துக்கு தரவேண்டிய நிதிகளை மத்திய பாஜக அரசு தருவது இல்லை. பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது. தவெக தலைவா் விஜய்யின் அரசியல் வாழ்க்கை குறித்து மக்கள் முடிவு செய்வாா்கள் என்றாா் அவா்.

செல்வப் பெருந்தகை முன்னிலையில் கன்னியாகுமரியைச் சோ்ந்த மென்பொறியாளரும் சமூகஆா்வலருமான ராஜன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.

இந்த நிகழ்வின்போது சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி அமிா்தராஜ் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.