தொகுதிகளைக் குறைத்தாலும் வெற்றியை அதிகப்படுத்துவோம்: டி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்பு நேர்காணல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதி உடன்பாடு தொடர்பான பணியில் இருப்பதால் அது முடிந்தவுடன், அவரிடம் ஒப்புதல் பெற்று வெளியிடப்படும்.
"கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளைக் குறைத்தாலும், அவர்களது வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் தேர்தல் பணியாற்ற திமுக முடிவு செய்துள்ளது' என்று அக் கட்சியின் செய்தி தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை என திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்படுகிறது. இப்பணிகளில் தீவிரமாகப் பங்கேற்றிருக்கும் திமுக செய்தி தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தினமணிக்கு அளித்த நேர்காணல்:
திமுக தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும்?
ஓரிரு நாள்களில் வெளியாகும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதி உடன்பாடு தொடர்பான பணியில் இருப்பதால் அது முடிந்தவுடன், அவரிடம் ஒப்புதல் பெற்று வெளியிடப்படும்.
கடந்த தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அளித்தும், அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனவே?
கடந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றிவிட்டோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை; நீட் விலக்கு பெற முடியவில்லை. இதுபோன்ற மத்திய அரசு சார்ந்த வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்ற முடியவில்லை. அவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
நீட் விலக்கு வாக்குறுதி இம்முறையும் இடம்பெறுமா?
நிச்சயம் இடம்பெறும்.
கடந்த முறை மகளிர் உரிமைத் தொகை, இலவச திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறும் சூழலில், இந்த முறையும் இலவச திட்டங்கள் இருக்குமா?
சமூகத்தில் கீழ் இருப்பவர்களை உயர்த்தி கொண்டுவரும் திட்டங்களுக்கு திமுக எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. மத்திய அரசிடம் கூடுதல் நிதியைப் பெற்றும், மாநில அரசின் வருவாயைப் பெருக்கியும் சமூகநலத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
இந்த முறை நான்குமுனைப் போட்டி எப்படி இருக்கும்?
திமுக கூட்டணி வாக்குகள் அப்படியே இருக்கும். எதிர்ப்பு வாக்குகள் நான்குமுனையாக சிதறும் வாய்ப்புள்ளது. அதிமுக, நாதக, சசிகலா-ராமதாஸ் ஆகியோர் ஏற்கெனவே உள்ளவர்கள்தான். புதிதாக வந்துள்ள விஜய் என்ன செய்யப் போகிறார் என்றுதான் பார்க்க வேண்டும்.
திமுக-தவெக இடையே போட்டி என்ற விஜய் கூறுவது பற்றி உங்களது கருத்து என்ன?
தமிழகத்தில் எப்போதும் திமுக-அதிமுக இடையேதான் போட்டி இருக்கும். இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாததால் அதிமுக தலைவர்கள் வேறு யாரையாவது சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் திமுகவுக்கு வந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியையும் மீறி அதிமுக-பாஜக கூட்டணியில் தினகரன் இணைந்துவிட்டார். சசிகலா, ராமதாஸýடன் கைகோத்துவிட்டார். எனவே, அதிமுகவின் பலம் 2021-ஐ விட குறைந்திருப்பதால் திமுக எளிதில் வெற்றி பெறும்.
விஜய் வருகையால் சிறுபான்மை, தலித் வாக்குகள் பிரியுமா?
சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவர்கள் திமுகவுக்கு தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். பாஜகவை பொதுப்படையாக எதிரி என விஜய் கூறுகிறாரே தவிர, பாஜக மீது கண்டனத்தை இதுவரை பதிவுசெய்யவில்லை.
மாநில உரிமை, மாநிலங்களுக்கு ஓரவஞ்சனையான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் கொடுக்கவில்லை. எனவே, சிறுபான்மையினர் விஜய்யை நம்பமாட்டார்கள். தலித் கட்சிகள் திமுகவுடன் இருப்பதால் அந்த வாக்குகளிலும் சேதாரம் ஏற்படாது. விஜய்யால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளை வேண்டுமானால் அவர் பிரிக்கக்கூடும்.
பேரவைத் தேர்தலில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்ற குரல் எழுந்தது மட்டுமன்றி, அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனுக்கள் அளித்துள்ளார்களே?
அவரது ஆதரவாளர்கள் விண்ணப்பித்திருக்கலாம். ஆனால், கனிமொழி விருப்ப மனு அளிக்கவில்லை. அவர் தில்லியில் நாடாளுமன்ற திமுக குழுவின் தலைவராக உள்ளார். பாஜகவை கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்த நேரத்தில், அவரை பேரவைக்கு அழைத்து வருவது சரியா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு எடுப்பார்.
திமுக கூட்டணியில் அதிக எண்ணிக்கையிலான கட்சிகளால் தொகுதிகளை ஒதுக்குவதில் குழப்பம் உள்ளதா?
வெற்றி பெறும் கூட்டணியில் இணையும் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது இயல்பு. அதேநேரத்தில், திமுக தனிப்பெரும்பான்மையுடனும், கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் விருப்பம்.
தொடர்ந்து, திமுகவுடன் பயணிக்கும் கட்சிகளுக்கு தொகுதிகளைக் குறைத்துவிட்டு, புதிதாக வந்த தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் என்பது நியாயம்தானா என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கட்சி தேமுதிக. அப்படி வலிமை பெற்றிருந்த கட்சி கூட்டணிக்கு வரும்போது உரிய மரியாதையுடன் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். தொகுதிகளைக் குறைத்தால் அதுவும் விமர்சிக்கப்படும்.
நேர்காணல் - பீ.ஜெபலின்ஜான்