முகப்பு
தமிழ்நாடு

புனித வெள்ளி, வார விடுமுறை: 2257 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புனித வெள்ளி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,257 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 மார்ச், 2026 at 7:42 PM
கோப்புப் படம்.
பகிர்:

புனித வெள்ளி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,257 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புனித வெள்ளி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை (ஏப். 2) 575 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை (ஏப். 3,4) 395 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை 100 பேருந்துகளும், வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 90 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, மாதாவரத்திலிருந்து வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை தலா 24 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை 735 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,257 இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.