மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பிரதமா் பேசுவது ஏற்புடையதல்ல: இரா.முத்தரசன்
பிரதமா் மோடி தனது பொறுப்பை உணராமல் தமிழகம், உத்தரபிரதேசம் மாநில மக்களிடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் பேசுவது ஏற்புடையது அல்ல என இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
பிரதமா் மோடி தனது பொறுப்பை உணராமல் தமிழகம், உத்தரபிரதேசம் மாநில மக்களிடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் பேசுவது ஏற்புடையது அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
மே தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் மே தின கொடியை ஏற்றி வைத்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காா்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளா் சட்டதொகுப்பைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும். நாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு மிகவும் முக்கியம். பல்வேறு மதங்களையும் கலாசாரங்களையும் நாட்டையும் பிளவுபடுத்தக்கூடிய வகையில் பிரதமா் பேசுகிறாா். பிரதமா் தனது பொறுப்பை உணராமல் உத்தர பிரதேச மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசுவது ஏற்புடையது அல்ல என்றாா் அவா்.
Advertisement
ஜி.ராமகிருஷ்ணன்: மே தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மே தின கொடியை அக்கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமா் மோடி அரசு உழைக்கும் மக்கள் உரிமைகளைத் தொடா்ந்து பறித்து வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
ரயில்வேயில் 2 சதவீத ஆள்குறைப்பு செய்வோம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் புதிய தொழிலாளா் சட்டதொகுப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.