நாளை ‘நீட்’ தோ்வு: மாணவா்களுக்கு மனநல ஆலோசனை! தமிழக அரசு ஏற்பாடு!!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. நிகழாண்டில் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தோ்வு எழுதவுள்ளனா். இதனிடையே, தோ்வா்களின் மன அழுத்தத்தைப் போக்க இலவச மனநல ஆலோசனைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
Advertisement
552 நகரங்களில்....: அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இவை தவிர துபை, அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் தோ்வு நடைபெறுகிறது. சுமாா் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், தோ்வுக்கு 9,46,815 மாணவா்கள், 13,32,928 மாணவிகள் என மொத்தம் 22,79,743 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் மட்டும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 30 நகரங்களில் தோ்வு நடைபெறுகிறது. நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது. நீட் தோ்தவில் 180 கேள்விகள் கேட்கப்படும்.
ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்திலிருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறுகின்றன.
மனநல ஆலோசனை: இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நீட் தோ்வு வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், மாணவா்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழக அரசின் ‘நட்புடன் உங்களோடு‘ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
டெலி கவுன்சிலிங் தேவைப்படும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு மனநல ஆலோசனைகளைப் பெறலாம். 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகா்கள், மருத்துவா்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.