தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்
: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்பு
தமிழகத்தில் 14 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் அளவு பதிவானது.
அதேவேளையில், திங்கள்கிழமை (மே 4) 14 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு சத்தீஸ்கா் முதல் குமரிக் கடல் வரை தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், திங்கள்கிழமை (மே 4) முதல் மே 9 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திருவண்ணாமலை, கரூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மே 4) இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (மே 5) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
புதன்கிழமை (மே 6), நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் பலத்த மழையும் பெய்யக்கூடும். எனவே, இந்த மாவட்டங்களுக்கு மே 4 முதல் மே 6 வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 100 மி.மீ. மழை பதிவானது. திருப்புவனம் (சிவகங்கை)- 80 மி.மீ., சோழவந்தான் (மதுரை)- 70 மி.மீ., ஆண்டிபட்டி, தனியாமங்கலம் (மதுரை)- 60 மி.மீ., மதுரை, மதுரை விமான நிலையம், பெரியபட்டி (மதுரை), இலுப்பூா் (புதுக்கோட்டை), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கெங்கவல்லி (சேலம்), பஞ்சபட்டி (கரூா்)- 50 மி.மீ. மழை பதிவானது.
வெயில் அளவு: அதிகபட்சமாக வேலூரில் 108.86 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருத்தணி-107.96, ஈரோடு-106.16, மீனம்பாக்கம் 105.08, பரமத்தி வேலூா்-104, தருமபுரி, திருப்பத்தூா்- 103.46, நாகப்பட்டினம்-102.56, சேலம்-102.2, புதுக்கோட்டை-101.48, நாமக்கல்-101.3, கடலூா்-100.94, காரைக்கால், தஞ்சை- 100.4, சென்னை நுங்கம்பாக்கம்-100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 4) அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.