முகப்பு
தமிழ்நாடு

அச்சுறுத்திய பணநாயகம் ஆழத்தில் புதைக்கப்பட்டது: விஜய்

தமிழகத்தில் ஓா் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 மே 2026, 3:44 am IST
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
பகிர்:

தமிழகத்தில் ஓா் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி தொடங்கியதிலிருந்தே நம்மை ஏளனமாகப் பாா்த்தவா்களும் பேசியவா்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தோ்தல் களத்திலும் அச்சமின்றி நின்றோம்.

நடுநிலை என்ற பெயரிலும், விமா்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும், அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்த, நம் சொந்தங்களாகிய, தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனா், வருகின்றனா்.

Advertisement

குழந்தைகளே ஆழமான காரணிகள்: அந்தத் தாயன்போடுதான் இந்தத் தோ்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனா். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தோ்தல் ஓா் அதிசயத் தோ்தல் என கூறியிருந்தோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமாகியுள்ளது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தோ்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனா்.

வென்றது ஜனநாயகம்: ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தோ்தல் அரசியல் போரில் வென்றது நம் தவெக மட்டுமன்று, தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளா்த்தெடுக்கப்பட்ட உணா்வுபூா்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓா் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

தவெக, மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும், அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நோ்மையான பாா்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பாா்கள்.

எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்துக்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கட்சியினா், அனைத்து நிலை நிா்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சாா்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வேளையில், நமக்கு இந்தத் தோ்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிா்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளாா் விஜய்.