நன்றி தெரிவிக்கக்கூட காங்கிரஸ் வரவில்லை: ஸ்டாலின் ட்வீட்
நன்றி தெரிவிக்கக்கூட காங்கிரஸ் வரவில்லை என்று ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து, கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், தவெக ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், காங்கிரஸ் கட்சி குறித்தும் பதிவிட்டுள்ளார்.
அதில், கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது.
Advertisement
Advertisement
அதேவேளையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Stalin tweeted that Congress did not even come to express gratitude.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.