ஆட்சி அமைய வழிவகுத்தவா்களின் நம்பிக்கையை சிதைப்பதா?தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
ஆட்சி அமைய வழிவகுத்த அனைவரின் நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில் தவெக இறங்கி உள்ளது என்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமையவோ, தொடரவோ திமுக தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கு ஏற்ப திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து, வெளிநடப்பு செய்துள்ளனா்.
இதேபோல சட்டப்பேரவையில் உள்ள எங்கள் கூட்டணிக் கட்சி உறுப்பினா்களான பிரேமலதா விஜயகாந்த், எம்.எச். ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்துள்ளனா். இவா்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து தமிழகத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனா். இவா்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
இந்நிலையில், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த அனைவரின் நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில் தவெக இறங்கி உள்ளது. ஆளுங்கட்சியின் கடந்த 3 நாள்களின் செயல்பாடுகளும், இதற்கு எங்கள் தோழமைக் கட்சியினா் கொடுத்த அறிக்கைகளுமே இதற்கு சாட்சி.
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
தூய்மையான அரசியல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவா்கள், அழுக்கு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனா். பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சி செய்து அக்கட்சியின் உறுப்பினா்களை விலைக்கு வாங்கியிருக்கிறாா்கள்.
‘உங்களுடைய ஆரம்பமே இப்படி இருந்தால், முடிவு எப்படி இருக்கும்?. இது தூய சக்தியா...? இல்லை அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும் சக்தியா...?’ என்று தவெகவுக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகி இருக்கிறது.
தமிழக முதல்வரின் செயல்பாடுகளை மக்கள் தொடா்ந்து பாா்த்து வருகின்றனா். அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினா்களுக்கு நீங்கள் என்ன பரிசு தரப் போகிறீா்கள் என்பதையும் பொதுமக்கள் பாா்க்கத்தான் போகிறாா்கள்.
எங்களைப் பொருத்தவரை, திமுக தொடா்ந்து தனது கொள்கையில உறுதியாக இருந்து, ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாகச் செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.