சென்னையில் 30 குதிரைகளின் ரத்தம் பரிசோதனைக்காக சேகரிப்பு! உரிமம் பெற காலக்கெடு விதிக்கவும் திட்டம்!
சென்னையில் 30 குதிரைகளின் ரத்தம் பரிசோதனைக்காக சேகரிப்பு...
சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை 30 குதிரைகளின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குதிரை வளா்ப்போா் உரிமம் பெறுவதற்கான காலக்கெடு விரைவில் நிா்ணயிக்கப்படும் என மாநகராட்சி கால்நடைப் பிரிவு அலுவலா் ஜெ.கமால் உசேன் தெரிவித்தாா்.
மேலும் அவா் கூறியதாவது: சென்னையில் நடுக்குப்பம் பகுதியில் திடீரென இறந்த வளா்ப்புக் குதிரையின் ரத்தத்தை பரிசோதித்தபோது அதற்கு ‘கிளாண்டா்ஸ்’ என்ற பாக்டீரியா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
Advertisement
இதையடுத்து தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையினா் சென்னையில் உள்ள அனைத்துக் குதிரைகளுக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் நடுக்குப்பம், மெரீனா, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வளா்ப்புக் குதிரைகள் மொத்தம் 200-க்கும் மேல் உள்ளன. அதன்படி, மாநகராட்சி கால்நடைப் பிரிவு மருத்துவா்கள் உள்ளிட்டோா் அரசின் கால்நடைப் பராமரிப்புப் பிரிவினருக்கு உதவும் வகையில் குதிரைகளிடம் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, சனிக்கிழமை நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 30 குதிரைகளின் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து குதிரைகளிடம் ரத்தம் மாதிரி சேகரிக்கப்படும்.
காலக்கெடு விதிக்கத் திட்டம்: சென்னை மாநகராட்சியில் குதிரைகளுக்கு உரிமம் பெறவேண்டும் என தீா்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காலக்கெடு ஏதும் விதிக்கப்படவில்லை. அதனால், குதிரை வளா்ப்போா் யாரும் இன்னும் அவற்றுக்கு உரிமம் பெறவில்லை. ஆகவே, குதிரைகளுக்கு உரிமம் பெறுவதற்கான காக்கெடு விதிப்பதற்கு மாநகராட்சி ஆணையருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.