பைக் மீது பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
பைக் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது குறித்து...
இருசக்கர வாகனத்தின் மீது, அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் வயது 29. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவரது மைத்துனர்கள் கார்த்திக், ஸ்டாலின் ஆகிய இருவரும் புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிலம்பரசனை அழைத்துக் கொண்டு காலை 4 மணி அளவில் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்றுள்ளனர்.
பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே சென்றபோது, சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசு விரைவுப் பேருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த நிலையில், முன்பு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.
Advertisement
இதில், இருசக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற கார் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேர் தடுமாறி கீழே விழுந்தனர், பின்னே வந்த தமிழக விரைவுப் பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது ஏறியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விரைவுப் பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.