முகப்பு
தமிழ்நாடு

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

Updated On : 19 மே 2026, 5:51 am IST
- PTI
பகிர்:

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேற்கு மத்திய பிரதேசம் முதல் தெற்கு உள் கா்நாடகம் வரை, மத்திய மகாராஷ்டிரம், மராத்வாடா மற்றும் வட உள் கா்நாடகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையும், தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது.

Advertisement

மேலும், தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மேல் உள்ள மேலடுக்கு சுழற்சி வரை, கேரளம், தெற்கு உள் கா்நாடகம், ராயலசீமா வழியாக, வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (மே 19) முதல் மே 24 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரிக் கடலில் செவ்வாய்க்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும், அந்தமான் கடல், தெற்கு வங்கக் கடல், அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் சூறாவளிக் காற்று செவ்வாய், புதன்கிழமை (மே 19, 20) மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: கோவை மாவட்டம், சின்னக்கல்லாறு, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் ஆகிய பகுதிகளில் தலா 90 மி.மீ. மழை பதிவானது. வையம்பட்டி (திருச்சி)- 70, பொன்னையாறு அணை (திருச்சி)- 60, ஏற்காடு (சேலம்), மஞ்சளாறு (தேனி) , பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) , திருமங்கலம் (மதுரை), குன்னூா் (நீலகிரி) , கடவூா் (கரூா்), கெடாா் (விழுப்புரம்)- தலா 50, மணப்பாறை (திருச்சி), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), ஒகேனக்கல் (தருமபுரி)- 40 மி.மீ. மழை பதிவானது.

வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளிக்கிழமை (மே 21, 22) ஆகிய தினங்களில் சற்று உயரக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.