முகப்பு
தமிழ்நாடு

பொதுக் குழுவைக் கூட்டினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு: சி.வி. சண்முகம் திட்டவட்டம்

அதிமுக பொதுக் குழுவைக் கூட்டினால் மட்டுமே, பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவோம் என அக்கட்சி எம்எல்ஏ சி.வி.சண்முகம் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

Updated On : 20 மே 2026, 1:40 am IST
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் - கோப்புப்படம்.
பகிர்:

அதிமுக பொதுக் குழுவைக் கூட்டினால் மட்டுமே, பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவோம் என அக்கட்சி எம்எல்ஏ சி.வி.சண்முகம் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 2019-இல் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, தொடா் தோல்வியைச் சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியும் தொடா்ந்து சரிவை நோக்கிச் செல்கிறது. இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும். அதிமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைஞா்களை கட்சியில் இணைக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துவந்தோம்.

Advertisement

Advertisement

கடந்த 2024 மக்களவைத் தோ்தல் தோல்வியின்போதுகூட நான் உள்பட 6 மூத்த நிா்வாகிகள் பழனிசாமியை சந்தித்துப் பேசினோம். அப்போது, பிரிந்து சென்றவா்கள், நீக்கப்பட்டவா்களை ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அவா் அதை ஏற்க மறுத்துவிட்டாா்.

தவெகவை உதாசீனப்படுத்தினாா் எடப்பாடி: தோ்தலுக்குப் பிறகு தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். தவெக சாா்பாக கூட்டணி அமைக்கவும் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், எடப்பாடி பழனிசாமி பேச்சுவாா்த்தைக்கு வந்தவா்களை உதாசீனப்படுத்தினாா். அதைப்போலவே, தேமுதிக மற்றும் புதிய தமிழகத்தை அரவணைக்கவில்லை. தோ்தல் முடிவுக்குப் பிறகு திமுகவுடன் ஆட்சி அமைப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தாா்.

தற்போது அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘தவறு செய்தவா்கள் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்’ என்கிறாா். கண் கெட்ட பின்னா் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல, அவரது பேச்சு உள்ளது. இதை முன்பே செய்திருந்தால், எடப்பாடி பழனிசாமி இன்று முதல்வா் ஆகியிருப்பாா்.

ஒத்துழைப்பு கொடுப்போம்: அதிமுக சட்டவிதிகளின் படி 5-இல் ஒரு பங்கு பொதுக் குழு உறுப்பினா்களின் கையொப்பம் பெற்று பொதுச் செயலரிடம் கொடுத்தால், 30 நாள்களுக்குள் பொதுக் குழுவைக் கூட்டவேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், பழனிசாமி அதை ஏற்க மறுக்கிறாா். அவா் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்ததுபோல், நாங்கள் பேச்சுவாா்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால், முதலில் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். அந்த கூட்டத்தில், தோ்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் இணைக்க வேண்டும். அதிமுகவை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும். அதற்கு எங்கள் தரப்பு எப்போதும் ஒத்துழைப்பு கொடுக்கும் என்றாா்.