அமைச்சரவையில் சி.வி. சண்முகம் தரப்புக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?
அமைச்சரவையில் சி.வி. சண்முகம் தரப்புக்கு இருக்கும் வாய்ப்பு பற்றி...
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்னும் 2 இடங்களே மீதமிருக்கும் நிலையில், அதிமுகவின் சி.வி. சண்முகம் தரப்புக்கு வழங்குவதில் சாத்தியமில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதல்வராக சி. ஜோசப் விஜய் மற்றும் அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸின் 2 அமைச்சர்களும், தவெகவின் 21 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அமைச்சரவைக்கு அனுமதிக்கப்பட்ட 35 அமைச்சர்களில் இதுவரை 33 பேர் பொறுப்பேற்றுள்ளனர்.
விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளை அமைச்சரவையில் இணைய தவெக அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுகவின் சி.வி. சண்முகம் தரப்புக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதிமுகவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளித்தால் தவெக அரசுக்கு அளித்த ஆதரவை பரிசீலனை செய்வோம் என்று இடதுசாரிகளும், விசிகவும் தெரிவித்திருந்தன.
புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப் போவதில்லை என்று தவெக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பெயர் இடம்பெறவில்லை.
மீதமுள்ள 2 இடங்களில் விசிக எம்.எல்.ஏ. ஒருவரும், ஐயூஎம்எல் எம்.எல்.ஏ. ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.