தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு 8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு 8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொதுநலன் குறித்த கவலைகள் எழுவதாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், 2018 மே 22-ல் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பலியாகினர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொலைக்காட்சி வாயிலாகவே அறிந்ததாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பெரும் கண்டனங்களைக் கிளப்பியது.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்து 8 ஆண்டுகளான நிலையில், இச்சம்பவத்தில் பலியானோருக்கு தூத்துக்குடியின் பாத்திமா நகரில் இன்று (மே 22) நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு, மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி அஞ்சலி செலுத்தினர். மேலும், மக்களின் கோரிக்கைகளுடன் போராட்டத்தின் நோக்கங்களும் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் உயிரிழந்தோரின் நினைவாக, தூத்துக்குடியில் ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும் கூறினர்.
மேலும், தமிழக அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனி நபர் விசாரணை ஆணையம் சமர்ப்பித்த பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துமாறும், அவை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மண்ணிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, தேர்தலுக்கு முன்னர் 2025 ஆம் ஆண்டில் தவெகவின் மாநில மாநாட்டில் முதல்வர் விஜய் பேசுகையில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்நோலினின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது, “தூத்துக்குடி ஸ்நோலினின் அம்மா, என்னைத் தனது தம்பி என்றும் அவரது மகளுக்கு நான் தாய்மாமன் என்றும் கூறினார். அந்த அக்காவின் குழந்தைக்கு மட்டுமில்லை, நான் என்னை அண்ணனாக, தம்பியாக நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதரிகளின் குழந்தைகளுக்கும் தாய்மாமன்தான்” என்று தெரிவித்திருந்தார்.
The 8th year memorial tribute event in remembrance of those who lost their lives during the anti-Sterlite protest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.