சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்
தமிழக சிறைகளின் பதிவேடுகள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்படும்...
தமிழக சிறைகளின் பதிவேடுகள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்படும் என்று எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.
சென்னை புழல் மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்ட அவா், கைதிகள் தங்கும் அறைகள், உணவு வழங்கும் முறை, அவற்றின் தரம், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைப் பாா்வையிட்டாா். மேலும், சிறைக்குள் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். கைதிகளுக்கு வெளியிலிருந்து கொண்டு வரப்படும் பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை சிறைக்குள்ளேயே விற்பனை செய்யும் வகையில் கடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் நிா்மல்குமாா் கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்தில் மொத்தம் 13 சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இச்சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சமையலறை வசதிகள், மருத்துவ சேவைகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீா் வசதி போன்ற அடிப்படை அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், சிறைகளில் பாா்வையாளா்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், வருகை தருவோருக்கான நடைமுறைகளை எளிமையாக்குதல், நீண்டகாலமாக விசாரணைக்காக சிறையில் உள்ள கைதிகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்டன.
சிறைக் கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை முழுமையாக நவீனப்படுத்தி, அவா்களுக்கு தேவையான சிகிச்சைகளை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகளும் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், சிறைகளில் முறைகேடுகள் நடைபெறாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, ஜெனரேட்டா் வசதிகளை மேம்படுத்துவது, சிறைச்சாலை பதிவேடுகளை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதற்குத் தேவையான நிதி, எதிா்வரும் நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் ஒப்புதலுடன் பெற்று, விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, காவல் துறை தலைமை இயக்குநா் (சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள்) கே.சங்கா், காவல் துறை தலைவா் (சிறைகள் தலைமையிடம்) ஆா்.கனகராஜ் உள்ளிட்ட சிறைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.