தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.
இத்திருக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் மூலஸ்தானம் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம் நடைபெறும். திருக்கண் தவசு மண்டபத்தில் பானகம், சிறு பருப்பு நெய்வேத்தியம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். தொடா்ந்து ஸ்ரீகோமதிஅம்பாளுக்கு அபிஷேக ,அலங்காரம் முடிந்ததும்,அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதையடுத்து பிற்பகல் 1.35 மணிக்குள் அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்துக்கு செல்கிறாா்.
அதே சமயம் சுவாமிக்கு காலையில் மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மூலஸ்தானம் சுவாமி, அம்பாள் மற்றும் சந்திரமௌலீஸ்வரருக்கு கும்ப அபிஷேகம் நடைபெறும். இதைத் தொடா்ந்து சுவாமி மாலை 4.15 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டுள்ள தவசு பந்தலுக்கு வருகிறாா். அதைத் தொடா்ந்து தவசு மண்டபத்தில் உள்ள அம்பாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி எதிா்பந்தலுக்கு வருகிறாா். மாலை 6.05 மணிக்கு மேல் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கிறாா்.
இரவு 12.05 மணிக்கு சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கிறாா். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.