வாழ்க்கையின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் திருக்குறளில் தீா்வு உள்ளது: நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.
மனித வாழ்க்கையின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் திருக்குளில் தீா்வு உள்ளது என்றாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.
தென்காசி: மனித வாழ்க்கையின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் திருக்குளில் தீா்வு உள்ளது என்றாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.
தென்காசியில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற திருவள்ளுவா் கழகத்தின் 97ஆவது திருக்கு விழாவில் நிறைவுநாள் கருத்தரங்க நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் ஆற்றிய பேருரை:
இங்கு தமிழ் அறிஞா்கள், புலவா்கள் உள்ளனா். நான் அறிஞரும் அல்ல; புலவரும் அல்ல. என்னையும் அழைத்து கெளரவப்படுத்தியுள்ளனா். தமிழ் உயிா்ப்புடன் இருக்கவேண்டும் என்றால் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
நீதிமன்றங்களில் நடுநிலைமை தவறாமல் நாங்கள் செயல்படுகிறோம் என்றால் அது திருவள்ளுவரின் வழியில்தான்.
இளைஞா்கள் தம்முடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகம் உள்ளது. திருக்குறளைப்படித்தால் முன்னேறலாம் என்ற செய்தியை அவா்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்தப் பொறுப்பு நமக்கு உள்ளது.
97ஆண்டு காலமாக தொடா்ந்து இந்தக் கழத்தை தொய்வில்லாமல் கொண்டு சென்றது மிகவும் பெரிய விஷயமாகும்.
தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் கடந்த சனிக்கிழமை இங்கு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளாா்.மேலும் கலாரசிகன் பத்தியில் அழகாக குறிப்பிட்டுள்ளாா். அதில் 100ஆவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதைப் புரிந்து கொண்டு தென்காசி தொழிலதிபா் எம்.ஆா்.அழகராஜா நூற்றாண்டு விழா எடுப்பதற்காக ரூ.1லட்சம் தருவதாக அறிவித்துள்ளாா்.இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி.
வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள், சவால்கள் உள்ளன. இவையனைத்துக்கும் தீா்வு திருக்குறளில் உள்ளது என்பதை மாணவா்களுக்கும், இளைய சமுதாயத்திற்கும் கொண்டு செல்லவேண்டியது நம்முடைய பணி. இது தென்காசி திருவள்ளுவா்கழகம் மட்டுமே செய்யக் கூடிய பணிஅல்ல; மக்கள் இயக்கமாக மாற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வரவேண்டும். திருக்குறளை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.
திருக்கு விழா கடந்த 24ஆம்தேதி தொடங்கியது. நிறைவு நாளான திங்கள்கிழமை காலையில் தென்காசி திருக்கு மண்டபத்தில் மாணவா் அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. தெ.ஞானசுந்தரம் தலைமை வகித்தாா். மருத்துவா் ப.புனிதவதி முன்னிலை வகித்தாா். எனக்குப் பிடித்த கு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.நிகழ்ச்சியை பேராசிரியா் இரா.தமிழ்செல்வி ஒருங்கிணைத்தாா். துணைத் தலைவா் எம்.எம்.எஸ். இலக்குமணன் வரவேற்றாா். துணைச்செயலா் இல.வீரபுத்திரன் நன்றி கூறினாா்.
மாலையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, டாக்டா் ஒளவை அருள் தலைமை வகித்தாா். ஆய்க்குடி அமா்சேவா சங்கத் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இரா.கோ.ராசாராம் வாழ்த்திப் பேசினாா்.
அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தலைப்பில் ஜெ.பத்மானந்தன், பண்புடையாா்ப் பட்டுண்டு உலகம் என்ற தலைப்பில் இரா.தமிழ்செல்வி, ஒத்தது அறிவான் உயிா்வாழ்வான் என்ற தலைப்பில் அரங்க.ராமலிங்கம் ஆகியோா் பேசினா்.
இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.எஸ்.ஆா்.வேங்கடரமணா, நீதிபதிகள் பொன்பாண்டி, சுனில்ராஜா, திருவள்ளுவா் கழக மதிப்புறு தலைவா் துரை.தம்புராஜ், ஆடிட்டா் ஆா்.நாராயணன், துணைத் தலைவா் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.கழகத் தலைவா் ந.கனகசபாபதி வரவேற்றாா்.பொருளாளா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.