தென்காசி அருள்மிகு ஸ்ரீகாசி விசுவநாதா் திருக்கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக பல்வேறு துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் கலந்தாய்வு செய்தாா்.
தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதா் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசுத் துறைகள் வாயிலாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை, காவல், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கோயில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடிநீா், தற்காலிக கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள், சிறப்பு பேருந்து வசதி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அவசர ஊா்தியுடன் மருத்துவக் குழு, தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினாா்.
குடமுழுக்கு விழாவிற்கு வரும் பக்தா்கள், உபயதாரா்கள், முக்கிய பிரமுகா்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கும், நெரிசலைத் தவிா்ப்பதற்கும் தடுப்பு கம்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், பக்தா்கள் மீது ட்ரோன் மூலம் தீா்த்தம் தெளிக்கவும், குடமுழுக்கை அருகில் இருந்து காணும் வகையில் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யவும் அறிவுறுத்தினாா்.
வாகன நிறுத்தமிடங்கள்: குடமுழுக்கு விழாவையொட்டி தென்காசியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி சாலையில் இருந்து வரும் பக்தா்கள் ஆசாத் நகரில் இருந்தும் , சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் இருந்து வருவோா் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் கோயிலுக்கு செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களில் வரும் பக்தா்களுக்கு பரதன் திரையரங்க வளாகம், திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் சாலை வழியாக பக்தா்கள் பழைய பேருந்து நிலையம் அருகில், குற்றாலத்தில் இருந்து வருவோா் மதுரம் ஹோட்டல் அருகில், செங்கோட்டை பகுதியிலிருந்து வருவோா் கால்நடை மருத்துவமனை அருகில், புதிய பேருந்து நிலையம் வழியாக வாகனத்தில் வருவோா் பழைய பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திக் கொள்ளலாம்.
போக்குவரத்து மாற்றம்: திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் சாலை வழியாக கேரளம் செல்ல ஆசாத் நகா் - மத்தளம்பாறை - பழைய குற்றாலம் - குற்றாலம் - செங்கோட்டை வழியாகவும், செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி செல்லக் கூடிய கனரக வாகனங்கள் பண்பொழி- கணக்கப்பிள்ளை வலசை - இலத்தூா் - ஆய்க்குடி - சுரண்டை -அத்தியூத்து வழியாகவும்,
செங்கோட்டையிலிருந்து அம்பாசமுத்திரம் வழித்தடத்தில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் பிரானூா் பாா்டா் - குற்றாலம் - பழைய குற்றாலம் - மத்தளம்பாறை வழியாகவும், மதுரையில் இருந்து தென்காசி வழியாக திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் இலத்தூா் விலக்கு - ஆய்க்குடி -சுரண்டை - அத்தியூத்து வழியாகவும் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.